Monday, May 11, 2015

ஆழி மழை

ஐந்து வருடங்கள் கழித்து மாரியம்மன் கோவில் சாட்டுவதால் ஊரே ஒரே கொண்டாட்டமாக இருந்தது. சிறியவர்கள் பெரியவர்கள் என கூட்டம் நிறைந்திருந்தது. கோவில் சுவர்கள் நன்றாக வெள்ளை அடிக்கப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு டுயூப் லைட் வெளிச்சத்தில் மிளிர்ந்தன. கோவில் முழுக்க மாவிலை தோரணமும் வாசலில் வாழை மரங்களும் கட்டப்பட்டிருந்தன.

சாட்டு பூஜை தொடங்க நேரம் குறைவாக இருந்ததால் கோவில் பூசாரி வேகமாக மாரியம்மனை அலங்காரம் செய்துகொண்டிருந்தார். ஊர் பெரியவர்கள் ஒன்றுகூடி வரிவசூல் விவரங்களை சரிபார்த்துக்கொண்டே இந்தவருடம் பெய்த கோடை மழையை சிலாகித்தும் பேசிக்கொண்டிருந்தனர்.

பறை அடிப்பவர்கள் பறையை தீயில் காட்டி சூடேற்றிக்கொண்டிருந்தனர். கந்தனும் அவர் பேரனும் ரோட்டோரத்தில் பனையோலையில் தீமூட்டி பறையை வார்பிடித்துக்கொண்டிருந்தனர். பேரனின் கால் தரையில் தங்கவில்லை. ஒருகால் மாற்றி ஒருகால் ஊன்றி நின்ற இடத்திலையே ஆடிக்கொண்டிருந்தான். பேரன் கந்தனின் மூத்த மகனின் பையன். கந்தனின் மகன் வேறு சாதிப்பெண்ணை மணந்து பொள்ளாச்சியில் இருந்தான்.
மகன் பாம்பு கடித்து இறந்து போக மருமகள் வீட்டில் சண்டையிட்டு பேரனை கந்தன் தன்னுடனே எடுத்து வந்து வளர்த்து வருகிறார். கடந்த ஆடி மாதம் முதல் அவன் பறை அடிக்க கற்றுக்கொண்டிருந்தான். மாரியம்மன் திருவிழாவில் தன் பேரன் பறையடிப்பதை பார்க்க கந்தனும் மிக ஆர்வமாக இருந்தார்.

ஊர் பெரியவர்கள் கூடி யார் கங்கணம் கட்டுவது யார் பூச்சட்டி எடுப்பது என அடுத்த ஏழு நாட்களும் நடக்க வேண்டிய விசயங்களைப்பற்றி விவாதித்தபடி இருந்தனர்.

மாரியம்மன் பொன்னாடை போர்த்தி அலங்காரம் செய்யப்பட்டு பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருந்தாள். பூசாரி கோவில் மணியை அடித்து கோவில் சாட்டு முறைப்படி தொடங்குவதை அறிவித்தார். கொஞ்சம் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

"சாமி, உங்க எல்லாருக்கும் தெரியும். நம்ம மாரியாத்தா கோயிலு அஞ்சு வருசமா சாட்லீங்க".

" நனைய கூட மழை இல்ல. கோயில் கெணத்துல தண்ணி இல்ல."

"ஆத்தா மனசெறங்கி இந்த வருசம் நல்லா மழபேஞ்சு நாடு செளிசிருக்குது சாமி "

"அதனால இந்த வருஷம் கோயில் சாற்றதுனு முடிவு பண்டிருக்குது சாமி "

பூசாரி பூஜை சாமான்களை தட்டில் வைத்தபடியே சொல்லி முடித்தார்.

"பறையடிக்கற பசங்கல்லாம் வாங்கப்பா" சத்தம் போட்டார் மயில்சாமி.

பறை சத்தம் விட்டு விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டது.

கந்தனும் அவர் பேரனும் ஆர்வமாக கோவில் வாசலில் பறையடிக்கும் கூட்டத்துடன் இணைந்து கொண்டனர்.

கூட்டத்திலேயே சிறுவனாக இருந்ததால் கந்தனின் பேரன் நடுவில் நின்று எல்லாரையும் சுற்றி சுற்றி பார்த்துகொண்டிருந்தான். அவனுக்கு ஆர்வம் பீறிட்டது.

"இவன யாருப்பா உள்ளுக்குள்ள உட்டது". கூட்டத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

யாரும் பெரிதாக காதுகொடுத்து கேட்கவில்லை. கேட்டவர்களும் கண்டுகொள்ளவில்லை.

"அட அந்த பையன வெளிய போக சொல்லுங்கப்பா" இப்போது வேறு ஒரு குரல். கூட்டம் கொஞ்சம் அமைதியானது.

"யாருப்பா அது. என்ன சொல்றதா இருந்தாலும் கொஞ்சம் முன்னாடி வந்து சொல்லுங்கப்பா" மயில்சாமி சத்தமாக கத்தினார்.

"எந்த சாதிக்கரேன் வேணும் நாளும் பறையடிக்கலாம சாமி". குரல் மட்டுமே முன்னாடி வந்தது. உருவம் வந்திருக்கவில்லை.

"ஏய் என்னப்பா இது. சொல்லிகிட்டே இருக்கறேன். ஒழுங்கா என்ன சொல்லணுமோ சொல்லுங்க. கும்பம் தாழிக்க நேரமாகுது" மயில்சாமி கொஞ்சம் கடிந்து கொண்டார்.

"கந்தன் பேரன் பறை அடிக்கறத சொல்றாங்கபோல இருக்குது சாமி." முனகினான் சாமான்.

நிசப்தம் நிலவியது. சிலருக்கு புரிந்தும் சிலருக்கு புரியாமலும்.

"பையன் அப்பா நம்மாளுதான் ஆனா அவ அம்மா வேற சாதில"

"எவன்டா அவன் எவ பெத்தா என்னடா. ரத்தம் நம்ம சாதி ரத்தமுட"

கந்தனின் கால் நடுக்கம் கண்டது. கந்தன் கூட்டத்தினரின் கண்களையே பார்த்துகொண்டிருந்தார்.

இங்க பாருங்கப்பா. உங்க பிரச்சனைய பேச நேரமில்ல. பையன் கொழந்தபையன். பறை அடிச்சா அடிச்சிட்டு போறான் உடுங்க. இல்லீனா நீங்களே பேசி முடிவி பண்ணுங்க. நேரத்த கடத்தாதீங்க. இராசு பேசியவரே  இடுப்பில் கட்டிய துண்டும் நேர்த்தியாக நெற்றியில் பூசப்பட்ட விபூதியுமாக கோவிலில் இருந்து வெளியே வந்தார்.

பறையடிப்பவர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டனர்.கந்தன் செய்வதறியாது தனித்து நின்றுகொண்டிருந்தார். பேரன் ஏதும் புரியாதவனாய் பறையை தடவி தடவி பார்த்துக்கொண்டிருந்தான்.

இராசு அருகில் வந்து கந்தனின் தோளில் கையைபோட்டு நடக்க ஆரம்பித்தார்.

கந்தா இவனுக புரியாம பேசறானுக. குழந்தையும் தெய்வமும் ஒண்ணு. பச்ச மண்ணுக்கு ஏதுய சாதி.

இவனுகளுக்கு சொன்னா புரியாது. அஞ்சு வருசங்களுச்சு கோயில் சாட்டுது. எதுக்கு பிரச்சன. கம்முனு இரு. அடுத்தவாட்டி பாத்துக்கலாம்.

கந்தன் இராசுவின் காலில் நெடுக விழுந்து கதறினார்.

"சாமி இவன் அப்பனுக்கு பத்து வயசு இருக்கும்போதே உரிமையை ஆத்தா முன்னாடி அவனுக்கு  குடுதுட்டேன்னு ஊருக்கே தெரியும் சாமி. "

"அந்த நாய் ஊரவிட்டு போய் எவளையோ கட்டிக்கிட்டான். அந்த குத்தம்தானோ என்னவோ ஆத்தா அவன கூப்பிடுக்கிட்டா."

"எங்க பரம்பரை கொட்டு இல்லாம கோயில் சாட்டுனதே இல்ல சாமி."

கந்தன் தலையில் அடித்தவாரே கதறி அழுதபடியிருந்தார். பேரனும் தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தான். இன்னும் பத்து பதினைந்து பேர் கூடினர். என்ன சொல்லியும் கந்தன் சமாதனம் அடையவில்லை.

கையை கூப்பி கோவில் பிரவாகத்தை நோக்கியவரே தரையில் படுத்து  கந்தன் அழுதபடியே இருந்தார். இராசு கையை பிசைந்தபடியே கோவிலை நோக்கி நடந்தார்.

பூஜை தொடங்கியதும் பறையடிக்கும் சத்தமும் வேட்டு சத்தமும் காதை பிளந்தது. யாரும் கந்தனையோ பேரனையோ கண்டுகொள்ளவில்லை.

மணி அடித்தவரே பூசாரி கோவிலை சுத்தி வந்தார். மாரியம்மனுக்கு பூஜை முடியும் நேரம் நடூர் லட்சமி கவுண்டச்சிக்கு சாமி வந்தது.

பழனி பண்டாரம் பூஜை தட்டு சாமான்களுடன் ஓடிவந்தார். ஊரே கன்னத்தில் போட்டுக்கொண்டது.

"பத்து வருசங்களுச்சு கோயில் சாட்டறோம். ஏதாவது குறை இருந்தா சொல்லு ஆத்தா".

 "ஏண்டா அஞ்சு வருசமா கோயில் சாட்டுல"

"மழை தண்ணி இல்ல. அப்பறம் எப்புடி கோயில் சாட்டுறது. ஆத்தாளுக்கு அபிஷேகம் பண்றதுக்கே வழி இல்லையே ஆத்தா".

"இந்த வருஷம் நல்ல மழை. அதான் உன்ன சந்தோஷப்படுத்த கோயில் சாட்றோம் ஆத்தா"

இராசு ஆத்தாவின் காலில் விழுந்தார்.

"தீட்டு இல்லாம பாத்துக்குங்கடா. அடுத்த வருஷமும் நல்லா மழை பேயும்"

ஒரே திரும்பி கந்தனையும் அவன் பேரனையும் பார்த்தது. கந்தன் அழும் சத்தம் கோயில் பிரவாகத்தில் பட்டு எதிரொலித்தது. ஆனாலும் மாரியாத்தாவின் காதில் மட்டும் ஏனோ விழவேயில்லை. ஆத்தா சம்பிரதாயங்களை முடித்து மலையேறினாள்.

பூஜை முடிந்ததும் சிலர் கூடி கந்தனை சமாதனம் செய்ய முயன்றும் கந்தன் கேட்கவில்லை. கோபத்தில் கத்த ஆரம்பித்தார். வெகுநேரம் ஆகியும் கந்தன் நீட்டி படுத்தபடியே அழுதுகொண்டிருந்தார். பேரன் கந்தன் அருகிலேயே படுத்து தூங்கிப்போனான்.

வடக்கே வானத்தில் மின்னல் எடுத்திருந்தது.

கூட்டம் கலைந்து சென்றது. சிலர் மட்டும் பாதி தூக்கமும் பீளை படிந்த கண்களுமாக கந்தனை வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.

இராசுவும் செய்வதறியாது வண்டியை எடுத்து கிளம்பினார். சிறிது தூரம் சென்றவர் வண்டியை நிறுத்தி மீண்டும் கோவிலை பார்த்தார். டுயூப் லைட் வெளிச்சத்தில் எல்லோரும் மங்கலாக தெரிந்தனர். அழுகை குரல் மட்டும் பிசிறில்லாமல் கேட்டது.

எழுந்து நின்ற கந்தன் கண்களை துடைத்தவாறே பேரனை எழுப்பினார். வேட்டியை மடித்து கட்டியவாறே பறையை பேரனிடம் கொடுத்து அடிக்க சொன்னான். தூக்கமும் அழுகையுமாக பேரன் நடுங்கியபடி நின்றுந்தான்.

கந்தன் விட்ட அரையில் பேரனின் கண்ணம் சிவந்தது. மயக்கம் வரும்போல் இருந்தது.

"இந்த அடிடா. வேகமா அடிடா". பறையை நீட்டியவாறே இருபுறமும் மீசையை தடவி விட்டார்.

மாரியம்மன் சிலையை பார்த்தவாரே கையை உயர்த்தி கும்பிட்டவர் ஏனோ வேகமாக காரித்துப்பினார். எச்சில் கோவில் சுவரில்பட்டு வடிந்தது.

பேரன் பறையை அடிக்க இவர் ஆட ஆரம்பித்தார். ஒரு காலை மடக்கி ஒரு கையை தூக்கி  அவர் ஆடும் ஆட்டம் பேரனுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தாலும் தூரமாக நின்று வேடிக்கை பார்க்கும் மற்ற பசங்களை பார்க்க அழுகையும் பீறிட்டது.

கந்தன் உட்கார்ந்து எழுந்திருக்கும் பொழுது கேட்கும் முட்டியங்கால் சத்தம் பறை சத்ததிற்கு துணை இசையைபோல் இருந்தது.

மணி இரண்டு மூன்று இருக்கும். நேரம் போக போக ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். கந்தன் மற்றும் பேரனின் நிழல் மட்டும் கோவில் வாசலில் தன்னந்தனியாக நின்றிருந்தது. பறை சத்தம் மென்காற்றில் கலந்து ஊரெங்கும் பரவியது. கந்தன் மண்டியிட்டு கைகளை ஊன்றியவாரே மீண்டும் அழ ஆரம்பித்தார். பேரன் அயர்ந்து சோர்ந்து பறையின் மீது தலைவைத்தவாரே தூங்கிப்போனான்.

சிறிது நேரத்தில் கோடைமழை தூரல் போட ஆரம்பித்தது. கந்தனும் அவர் பேரனும் நகராமல் அதே இடத்தில இருந்தனர்.

உலகில் இருந்து தூக்கி  எறியப்பட்டு பிரபஞ்சத்தில் அனாதையை மிதக்கும் இரு உயிர்கள் போல மாரியம்மன் கோவில் வாசலில் இவர்கள் மட்டும்.

சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் பெரு மழை பெய்து ஓய்ந்தது. மழை மேகங்களை விளக்கி நிலவு எட்டிப்பார்த்தது. கந்தனையும் பேரனையும் காணவில்லை. மழை நீர் எங்கும் பரவியிருந்தது. அவற்றில் கோவிலின் மின்விளக்குகள் நனைந்துகொண்டிருந்தன.

கோபுரத்து விளக்கு விட்டு விட்டு எரிந்தது. வாசலில் கட்டியிருந்த வாழை மரங்கள் மழைக்காற்றில் தூக்கியெரியப்பட்டிருந்தன.

காலையில் கோவிலுக்கு புறப்பட்ட ராசு வரும் வழியில் ஊரின் ஒதுக்குபுறமாக உள்ள கந்தனின் வீட்டுக்கு வண்டியை விட்டார். நன்றாக பனைஒலையில் வேயப்பட்ட அந்த வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. இராசு பலமுறை கூப்பிட்டும் பதில் இல்லை. வீட்டின் பின்புறம் இருக்கும் கட்டுதாரையை பார்த்தார். ஈன்று இரண்டு மாதமே ஆனா மாட்டுக்கன்று, ராஜபாளையம் வம்ச நாய், கோழி அடைக்கும் குடாப்பு என்று எதுவுமே இல்லை.

கந்தன் ஊரையே காலி செய்திருந்தார். இராசுவின் மனம் வெம்பியது. பூவரசன் மரத்தடியில் தலை கவிழ்ந்தவாரே நின்றார்.கந்தனின் அழுகை குரல் மட்டும் காதில் விடாது ஒலித்துகொண்டே இருந்தது. கண்களில் நீர் முட்டி முட்டி நின்றது.

செல்போன் மணி அடித்தது. திடுக்கிட்டவர் செல்போனை அணைத்து மீண்டும் வீட்டை ஒருமுறை பார்த்தார்.

தலையை ஆட்டி தனக்குத்தானே சமாதனம் செய்தவாரே வண்டியை கிளப்பினார். பள்ளி வேன், பத்தானம்பர் பஸ், தாளக்கரை மணல் வண்டி, மெக்கானிக் ரவி என பலவும் இவரை கடந்து சென்றன.

ராசுவின் பஜாஜ் பைக்கின் ஸ்பீடோ மீட்டர் முள் எழுபதை தாண்டியது.

செல்போன் மணி மீண்டும் அடித்தது.  செல்போன் ரிங்க்டோனில் கந்தனின் அழுகை குரல் மெல்ல மெல்ல கரைந்துபோனது.

மழை ஈரத்தில் புதிய கோரைகள் முளைவிட்டிருந்தன.

No comments:

Post a Comment